திருச்சி திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டையை சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி என்கின்ற மணிகண்டன் (வயது 26).இவர் மீது திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவரை கழுத்தறுத்து கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ரவுடியாக சரித்திர பதிவேடு இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்றிமுன்தினம் இரவு திருவானைக்காவல் பாரதி தெருவில் உள்ள தனது தாய் பரமேஸ்வரி வீட்டிற்கு ஆட்டுத்தலை மணி வந்திருக்கிறார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், இரண்டு வெடிகுண்டுகளை வீட்டின் முன்பக்க கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துவிட்டு தப்பி சென்றனர்.அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததுடன், வீட்டின் நிலைக் கதவின் மேல் இருந்த சாமி படங்களுக்கான கண்ணாடிகள் சேதமடைந்தன. ஆட்டுத்தலை மணி வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவலறிந்த, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.

மேலும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.சோதனையின் முடிவில், அங்கு வீசப்பட்டது ‘வெங்காய வெடி’ எனப்படும் சாதாரண பட்டாசு வெடி வகை என்பது தெரியவந்தது.

அதையடுத்து, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த வரதா (எ) வரதராஜன் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் வரதன் என்கின்ற வரதராஜன், திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த முகேஷ், அழகிரிபுரத்தை சேர்ந்த சடையன் என்கிற ஐயப்பன் ஆகிய மூன்று பேரும், கொள்ளிடம் ஆற்றில் பதுங்கியிருந்தபோது, ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்தனர்.போலீசாரிடம் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, கீழே விழுந்து வரதன் மற்றும் முகேஷுக்கு கைகளில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *