திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தனர்.ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2009 ஆம் ஆண்டு காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது.

இதனால் புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம்ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறுகிறது.இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 எம்.எல்.டி நீர் வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சரியாக நீர் விநியோகிக்கப்படவில்லை என ராமநாதபுரத்திலிருந்து முதலமைச்சருக்கு புகார் சென்றது.அந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, கலைஞர் அவர்களால் ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.கடந்த பத்தாண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் 100 எம்.எல்.டி வழங்கப்பட்டு வந்த நீர் தற்போது 75 எம்.எல்.டி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு,முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுவது , பராமரிப்பு இல்லாத காரணங்களால் இத்தகைய பிரச்சனை நிலவி வருகிறது.ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களில் என்னனென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அந்த அந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்வோம் அதன் பின்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குனருமான மகேஷ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக 16 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள் அதை 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தால் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்யப்படும் விரைவில் முதலமைச்சர் அது குறித்து முடிவெடுப்பார்.அதே போல ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்…இந்த ஆய்வின் போது ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்