திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த வழக்கில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். மேற்படி சம்பவத்தின் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருச்சி அருகே ஜீயபுரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை விசாரணை செய்து ஸ்ரீரங்கம் தாலுகா பெருகமணி காந்திநகரைச் சேர்ந்த தீனதயாளன்,(39 ) மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்
தீனா (எ) தீனதயாளன் என்பவருடன் தொடர்பிலிருந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகிய 6 நபர்கள் மண்ணச்சநல்லூர் அருகே சித்தாம்பூர் பகுதியில் உள்ள வெடி கடையின் உரிமையாளர் முகமது தாசிதீனிடம் வெடிபொருட்களை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டுகளாகவும், வெங்காய வெடிகளாகவும் மாற்றி திருச்சி மாவட்டம், திருச்சி மாநகரம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி சித்தாம்பூர் வெடி கடையில் முகமது தாசிதீன் என்பவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெடி பொருட்களை பெற்று வந்து சித்தாம்பூர் பகுதியில் வைத்து விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்த அணலை பெரியார் நகரைச் சேர்ந்த மணி, சிவா, சூர்யா, ரஞ்சித், ரகு மற்றும் சங்கர் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெடி விற்பனை செய்த சித்தாம்பூர் பகுதியில் உள்ள வெடி கடையை இன்று மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் வெடிமருந்து கடையின் உரிமம், வெடி மருந்து கையிருப்பு, வெடி மருந்து கடை இடத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேற்கண்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டு வெடிகுண்டு தொடர்பான தகவல்கள், ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94874-64651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.