திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4 ம் சுற்று இன்று தொடங்கியது. திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மருத்துவர் ஷீலா தொடங்கி வைத்தார். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் 4 ம் சுற்று தொடங்கியது.

இன்று முதல் தொடா்ந்து 21 நாள்களுக்கு கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளின் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பால் உற்பத்தி கடுமையாக குறையும், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் இந்த நோயால் ஏற்படுகிறது.பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு விவசாயிகளாகவே இருப்பதால் கால்நடை இறப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க முடியாத நிலையில் உள்ளனா். எனவே கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துதல் அவசியமாகிறது.

இந்த நோயானது பொதுவாக குளிா் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், பால், உமிழ்நீா், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் ஏற்கனவே 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 4 ம் சுற்றுக்கான தடுப்பூசி முகாம் நவம்பர் 6 ந்தேதி இன்று முதல் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெறும்.எனவே கால்நடை உரிமையாளா்கள் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியனவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாது செலுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 இந்நிலையில் லால்குடி கோட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ஷீலா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த முகாமில் லால்குடி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் சந்துரு, திருவள்ளரை கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் லட்சுமி பிரசாத், கால்நடை பராமரிப்பு உதவியாளர், கால்நடை ஆய்வாளர், மற்றும் செயற்கை முறை கருவூட்டலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *