திருச்சி, ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதனால் ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடையலாம் என்பதும் ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். இன்று 17ம் தேதி துலாமாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜைக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து தினமும் காலை தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து செல்லப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோயிலுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் துலா மாதம் (ஐப்பசி) முழுவதும் மூலவர் பெரிய பெருமாள் தங்க ஆபரணங்கள் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்தாண்டு தற்போது மூலவருக்கு தைலக்காப்பு போடப்பட்டு இருப்பதால் தைலக்காப்பு உலர்ந்தபின் தீபாவளி தினத்துக்கு முன்பு மூலவருக்கு தைலக்காப்பு அகற்றப்பட்டு தங்க ஆபரணங்கங்களும், சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படவுள்ளது. அன்று முதல் மூலவர் திருவடி சேவையையும் தரிசிக்கலாம்.

ஊஞ்சல் உற்சவம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வரும் 18ம் தேதி துவங்கி 26 வரை நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் யாகசாலையிலிருந்து மாலை 5க்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்துக்கு 5. 30க்கு வந்து சேருகிறார். இரவு 7. 15க்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளிய பின் மங்களாரத்தி கண்டருளுகிறார்.பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9க்கு புறப்பட்டு 9. 15 மணிக்கு யாகசாலைக்கு சென்றடைகிறார்.விழாவின் 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை மற்றும் 8ம் நாள் ஆகிய 6 நாட்களும் தினமும் நம்பெருமாள் யாகசாலையிலிருந்து மாலை 5. 30க்கு புறப்பட்டு 6க்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேர்கிறார். பின்னர் ஊஞ்சல் உற்சவம் இரவு 7. 15க்கு துவங்கி 8 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6க்கு புறப்பட்டு கொட்டாரவாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 7க்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு நடைபெறும். இரவு 7. 30 முதல் 8. 15 வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிறைவு நாளான 9ம் நாள் 26ம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *