தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பதே சிலை திருட்டுக்கு வழிவகுப்பதால் கோவிலின் உள்ளே செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தமிழகத்தில் இருக்கக்கூடிய கோவில்கள் சத்திரம் போல் இருக்கின்றது. திருப்பதியில் கோவில் வாசலில் கூட செல்போன் எடுத்து செல்ல முடியாது. அந்த நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் மேலும் தமிழகம் முழுவதும் கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம். தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெற்று வருகிறது. அப்படி உலா வரும் தங்கத்தேரின் முன்பாக சில செல்போன் பிரியர்கள் தெய்வபக்தியை மறந்து புனித இடத்தில் நின்று கொண்டு தங்களின் செல்போனால் செல்பி எடுத்துக் கொண்டும், சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்பதற்காக சாமி சிலைகளை புகைப்படம் எடுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தெய்வத்தை காண ஆயிரம் கண் கோடி வேண்டும் என்பதற்கு போல் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியாமல் செல்போன் பிரியர்களால் மிகுந்த இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். புனித ஸ்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளே செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும் இந்து அறநிலைத்துறைக்கும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *