திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் அருகிலுள்ள வடுகப்பட்டியில் உள்ள வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளை சந்தித்து தேசிய உழவர்கள் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாத்து அழிவின் விளிம்பில் உள்ள பயிர்த்தொழிலையும் தொழிலாளர்களையும் மீட்டு வளப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தனர். உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நம் நாட்டில் வேளாண் உற்பத்தியை பெருக்கவும் உணவுப் பற்றாக்குறையை சரி செய்யவும் வேளாண் பரப்பை அதிகரித்து உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே அனைவருக்கும் உணவு சாத்தியமாகும். அசுர வேகமாய் பெருகிவரும் நகரமயமாக்கல் மற்றும் வயல்களின் பரப்பை சிதைத்து போடப்படும் சுற்றுச்சாலை, வட்டச் சாலை, புறவழிச்சாலை, நெடுஞ்சாலை ஆகியவற்றால் வீட்டுமனைகளாகும் வேளாண்வயல்களால் உற்பத்தியும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஏறும் விலைவாசிக்கு நடுவே நெல் கொள்முதல் விலையும் ஏற்றம் இல்லாததாலும் உரங்கள் பூச்சிக்கொல்லிகள் விலை ஏற்றத்தாலும் விவசாயத்தின் மீதான ஆர்வம் உற்பத்தி குறைந்துள்ளது. எனவே அவற்றையெல்லாம் களைந்து விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட வேண்டும், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு பயிர் செய்து மரபுசார் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்திட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் முன்னிலையில், இணைச் செயலர் ஆர்.கே.ராஜா, ஒருங்கிணைப்பில் , குமரன், தர்மராஜ், பால்ராஜ், பொன்னாத்தா மற்றும் பல கலந்துக் கொண்டார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *