திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மொத்த வியாபார செய்யும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரவு செலவு செய்யப்படுகிறது. முதல் நாள் நடைபெறும் வியாபாரத்தில் வரும் பணத்தை மறுநாள் காலை அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இதே போல் இன்று காலை காந்தி மார்க்கெட்டில் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கே.டி.எம் மளிகை கடையில் நேற்று வியாபாரம் செய்த ரூபாய் 37.5 லட்சம் பணத்தை மளிகை கடையில் கணக்காளராக பணிபுரியும் மன்னார்புரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (55) என்பவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை செலுத்துவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திருச்சி தபால் நிலையம் அருகில் உள்ள சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை வழிமறித்து உள்ளே கிருஷ்ணகுமார் கையில் வைத்திருந்த பணத்தை பறித்தனர். இதனை கண்ட ஆட்டோ டிரைவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜகான் தடுத்து நிறுத்த முயற்சித்த போது மர்மநபர் கையில் வைத்திருந்த கத்தி எடுத்து டிரைவரின் கையில் அறுத்துவிட்டு அங்கிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாக மறைந்தனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் கிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அறிந்த திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கணக்காளர் கிருஷ்ணகுமார் இடம் சம்பவ குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இந்த வழிப்பறி தொடர்பாக பணம் கொண்டு செல்வதாக தகவல் கொடுத்தது யார்? கடையில் பணியில் உள்ள யாரேனும் தகவல் கொடுத்தார்களோ? அல்லது இவர்களை பணத்தை கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் பணம் இருப்பதை அறிந்து பின்தொடர்ந்து வந்தனரா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானோர் பயணம் செய்யும் முக்கிய வீதியான திருச்சி தபால் நிலையம் பகுதியில் பட்டப் பகலில் கத்தியை காட்டி வழிபறியில் இரண்டு நபர்கள் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு கத்தி முனையில் பணம் பறித்து சென்ற வாலிபர்களின் புகைப்படத்தை வைத்து தீவிர தேர்தல் வேட்டையில் போலீஸ் சைடு மட்டும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *