தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பொறுப்பாளர்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளார்கள். உண்மையான தொழிலாளர்களுக்கு மட்டுமே பணப்பயன் சென்றடைய வேண்டும். இதில் தவறான தொழிலாளர்கள் பதிவு பெற்றிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் பென்ஷன் பெறுவதாகவும், இறந்து போன தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதாகவும் புகார் வந்துள்ளது. இதனை விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அனைவருக்கும் ஓய்வூதிய பணப்பயன் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கிஷான் திட்டத்தில் பயன்பெறக்கூடிய ஒருவர் கட்டுமான தொழில் செய்தால் அவருக்கு ஓய்வூதியம் நிறுத்தக்கூடாது என்று அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே அது குறித்த உத்தரவு அரசிடமிருந்து அனைத்து வாரிய அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ஓய்வூதியமும் பதிவும் சிறப்பாகவும் விரைவாகவும் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வரும் 18,19,20 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். கட்டுமான தொழிலாளர்கள் நிறைந்த அந்த தொகுதியில் அரசின் சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்ற இடத்தை முக.ஸ்டாலின் பெற்றுள்ளார். இவற்றை தொகுதி மக்கள் “எடை போட்டு” பார்த்து வாக்களிக்க உள்ளனர். தற்போது நடைபெறப் போவது இடைத்தேர்தல் அல்ல எடைத் தேர்தலாக இருக்கும். திமுக செய்த சாதனைகள் என்ன என்பது இந்த தேர்தல் மூலம் மக்கள் காட்டுவார்கள். அதிமுகவை கேடயமாக கொண்டு பாஜக பெரியார் மண்ணில் காலூன்ற பார்க்கிறது. பாஜகவின் B டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். எத்தனை கேடயங்களோடு பாஜக வந்தாலும் பெரியார் மண்ணில் கால் ஊன்ற முடியாமல் சம்மட்டி அடி கொடுக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *