தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி(26). இவருக்கும் பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள் தமிழழகிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்கள் தான் என அவர் கடிதம் எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட வாலிபர்கள் பாதிக்கப்பட்ட தமிழழகி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டி தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை ஐஜி அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்