சென்னை வானரகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியின் இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாக சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதில் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓ.பி.எஸ். ,இ.பி.எஸ். இருவரும் ஆணையரை நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

இந்தத் தீர்ப்பு ஓ.பி.எஸ். தரப்பினருக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்தது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் ,அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் தொண்டர்கள் தீர்ப்புக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் என்பார்கள். அது இன்றைக்கு நடந்திருக்கிறது. நாடே போற்றும் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பைத்தியலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூறி வந்தார்கள். அது நடந்திருக்கிறது.

இனிமேலாவது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். ஜெயக்குமார் என்ன பொறுப்பில் இருந்து கொண்டு பேசுகிறார் என தெரியவில்லை. திருச்சியில் அவர் தங்கியிருந்தபோது திரை மறைவில் யார்? யாரை சந்தித்தார் என்பது எங்களுக்கு தெரியும். கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் முடிவின்படி இருக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மனோகரன், ஜவஹர்லால் நேரு, வைத்தியநாதன், செங்கல் மணி, ராமச்சந்திரன், பரமசிவம்,இக்பால், மகளிர் அணி பத்மாவதி, வசந்தி, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்