சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கம் சார்பில் சிறகுகள் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர்பிஎட் வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறகுகள் தலைவர் பொன் சுந்தரம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், தொழிலதிபர் சரவணன் தண்டபாணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் செயலர் அந்தோணி கலைச் செழியன் துணைத் தலைவர்கள் பூபதி, கிருஷ்ணகுமாரி பொருளாளர் சற்குணநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‌

அதனைத் தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளில் மனவளர்ச்சிக்குன்றியவர்கள், சிறப்பு குழந்தைகளின் நடனம் மற்றும் நாடகம் நடைபெற்றது. முன்னதாக வளர்ச்சி குன்றியோர் தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றது.

பொது குழு கூட்டத்தின் தீர்மானங்களாக:-

மனவளர்ச்சிக்குன்றிய நபர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர வாழ்வாதார உதவித்தொகை ரூபாய் 10 ஆயிரம் என கணிசமாக உயர்த்தி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், ஒன்றுக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் உள்ள குடும்பத்தார் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும்,

தாயோ, தந்தையோ அல்லது இருவரையுமே இழந்து வாடும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கூடுதல் அரசு உதவிகள் வழங்கிட கோரியும், புதிதாக அடையாள அட்டை பெற உள்ள மன வளர்ச்சி குன்றியோருக்கு அறிவியல் முறைப்படி ஊனத்தை கணக்கிட்டு சான்றிதழ்கள் தர மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்,

டி.என்.பி.எஸ்.சி போன்ற அரசு தேர்வுகளில் அறிவு திறன் குறைந்த மன வளர்ச்சிக்குன்றியவரை இயல்பானவர்களோடு போட்டியிட்டு தேர்வு எழுத வைக்கும் முறையை மாற்றி அமைக்கவும், மனவளர்ச்சி குன்றியவர்களை பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்வதில்லை எனவே மாவட்டம் தோறும் இவர்களுக்கென்று பிரத்தியேகமான தொழில்கூடங்கள் தொடங்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *