தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களாக மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. முன்னதாக நேற்றும் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். தற்போது பெய்த மழையால் கோரை ஆற்றில் இருந்து வெளியேறும் மழைநீர் திருச்சி உறையூர் கருமண்டபம் எடமலைப்பட்டிபுதூர் கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

திருச்சி உறையூர் பகுதிக்குட்பட்ட லிங்க நகர், செல்வநகர் மங்கள நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், கோரை ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரின் காரணமாக இப்பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி தனி தீவு போல் காட்சி அளிக்கிறது.

அப்பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உடனடியாக அரசு அறிவித்த மழைக்கால பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினரான தீயணைப்பு படை வீரர்கள் படகு  மூலம் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *