உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் சார்பில் டாக்டர் ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒற்றை கம்பு சிலம்ப போட்டி, இரட்டை கம்பு சிலம்ப போட்டி, வாள்வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், குழு போட்டிகள் நடைபெற்றது.
மழலையர், ஜூனியர், சீனியர் உள்பட 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் திருச்சி, மதுரை, சேலம், சிவகங்கை, தஞ்சை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் மோகன் உள்பட சிலம்ப வீரர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.