கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். என்று கேட்டு கொண்டிருந்தார்.

அதேபோல் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என்று கட்சி உறுப்பினர்களிடம் திமுக அமைப்பு செயலாளரும்,எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும், கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் – ‘எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்’ என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள். அதன்பிறகு, கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவை காற்றில் பறக்க விடும் செயலாக இன்று திருச்சி காட்டூர் பகுதியில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்கும் விதமாக 20-க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் வரகனேரி இப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சாலையில் பிரம்மாண்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக நேற்று தெற்கு திமுக சார்பில் சாலையின் ஓரத்தில் திமுக கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது 

குறிப்பாக பேனர் கலாச்சாரம் குறித்து கடந்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் கட்- அவுட், பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றத்திற்கு சென்றதே திமுகதான். போஸ்டர் கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, திமுகவினர் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். ஆளும் கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்ற கூடாது என்று கிடையாது. என பெருமையாக பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் உத்தரவை காற்றில் பறக்க விடும் விதமாக இப்படி பொறுப்பில்லாமல் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கண்டும் காணாததுபோல் சென்றது வேதனை அளிப்பதாக திமுக நிர்வாகிகள் சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *