திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது….
ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகளை செய்கிறார்கள். இதன் மூலம் பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் கட்டப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட கட்டிடங்கள் மற்றும் நிழல் குடையில் நிதி ஒதுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பெயர் நிதி ஒதுக்கீடு தொகை தேதி போன்றவை கட்டிடத்தின் முகப்பில் எழுதப்படும். மேலும் இந்த கட்டிடங்கள் இருக்கும் வரை நிதி ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர் பெயர் இருக்கும் இதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை ஆகும்.
ஆனால் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 2006 முதல் 2011 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டகுறிச்சி ஊராட்சி, எகிரிமங்கலம், சாத்தனூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட நிழற்குடையில் இருந்து (பரஞ்ஜோதி) எனது பெயரை நீக்கிவிட்டு தற்பொழுது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பெயரை எழுதி இருப்பது முற்றிலும் ஆளும்கட்சியின் அராஜகப் போக்கை காட்டுவதாக உள்ளதுஇது போன்ற அராஜக சம்பவங்களின் மூலம் பொதுமக்கள் விரைவில் நியாயங்களை உணர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், பெயரை மாற்றிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். என்று தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.