தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவிலோ, வேறு இடங்களிலோ கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்தால் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று தற்கொலை போராட்டம் நடத்துவது என்றும், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் சேர்ந்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்காக முயற்சித்தபோது காவல்துறை டெல்லி செல்லாமல் தடுத்து நிறுத்தியது. இந்த அடக்குமுறையை கண்டித்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து அரசியலமைப்பு சட்டப்படி உரிமையை பெற்று டெல்லிக்கு சென்று போராடுவது என்றும், விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விளைபொருட்களுக்கு கொடுக்கும் வரை அனைத்து விவசாயிகளும் அனைத்து வங்கிகளிலும் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,

விவசாயிகள் தன்னுடைய பயிர்களுக்கு காப்பீடு செய்தால் தனி நபர் விவசாய காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும், 60 வயதை அடைந்த விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5000 பென்ஷன் தொகையாக வழங்க வேண்டும், விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய விவசாயக்கடன் இருப்பதற்கு விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடனை மறுக்கக்கூடாது, காவிரி ஆறு இணைப்பு கால்வாயை விடுவதுடன் கொள்ளிடத்தில் 10 தடுப்பணைகளும் காவிரியில் 10 தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்று இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *