திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்…. வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில், 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. திருச்சி கோட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு ஸ்டேஷன்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வரும் 26ம் தேதி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நான்கு ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் ஸ்டேஷன் 9.17 கோடியில், திருவண்ணாமலை ரூ8.17 கோடி, திருவாரூர் ரூ8.69 கோடி, கும்பகோணம் ரூ 120.67 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்பாதிபுலியூர், மணக்கால், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை, சஞ்சீவி நகர், ஆலத்துார், வில்லியனுார் ஆகிய ஏழு இடங்களில், 224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த பணிகளை மார்ச் மாதத்தக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 91.11 கோடியில் பணிகள் முடிந்த 26 தரைமட்ட பாலங்களை திறந்து வைக்கிறார்.

திருச்சி கோட்டத்தில், ரயில் தண்டவாளப் பகுதியில் கால்நடைகளை நடமாட விடுவதும், அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதும் அதிகம் நடக்கிறது. இதனால், ரயிலுக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், இதை பொதுமக்கள், பயணிகள் தவிர்க்க வேண்டும். திருச்சி– விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் வழித்தடத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, 321 வழக்கு பதிவாகி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *