2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சாப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த எஸ்.ஆர்.எம்.யு., ஐ.ஆர்.எப். ஆகிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன இந்த 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கெடுக்கும் தொழிலாளர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் தெற்கு ரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இந்த வாக்கெடுப்பு இங்கு நடந்தது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தங்களது பெயர் பணி விவரங்களை எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தொழிலாளர்கள் போட்டனர். இதனை எஸ் ஆர் எம் யு கோட்டச் செயலாளர் எஸ் வீரசேகரன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, என் பி எஸ் திட்டத்தை ரத்து செய்து 2004க்கு முந்தைய பழைய ஓய்வூதிய திட்டத்தை ரயில்வே உள்பட அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த ரகசிய வாக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ளது.
ஓய்வூதியம் என்ற பெயரில் மாதம் ரூ. 1700 முதல் ரூ. 4000 வரை மட்டுமே ரயில்வே தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது. லோகோ பைலட் ஒருவர் ரூ. 54,000 கடைசி சம்பளம் வாங்கியும் அவருக்கு ரூ. 5000 மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. அதே தொழிலாளி பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்திருந்தால் அனைத்து படிகளையும் சேர்த்து ரூ. 37 ஆயிரத்து 250 பெற்றிருப்பார்.எனவே இந்த என்பிஎஸ் திட்டத்தை ரத்து செய்து முந்தைய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.