தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லுாரியில் (தன்னாட்சி) இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையைப் பெற்று வழங்க லஞ்சமாக ரூ. 2,000 கேட்டது தொடர்பாக திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் வேணுகோபால் என்பவர் மீது கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 19 ஆம் தேதி சக்திவேலிடம் கையூட்டுப் பணம் ரூ. 2,000 கேட்டுப் பெற்ற போது வேணுகோபால் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வேணுகோபாலுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *