பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,;

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாஜகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கட்சியினரும் ஆட்சியும் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக அக்கட்சியினர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்கள் மூலமாக கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பினர். ஆனால் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நியாயமாக விமர்சித்ததற்காக 60 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக ஆளுநர் மீது வன்மத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்காக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

ஆனால் இந்த விவகாரத்தில் முதல்வர் இன்னும் கடுமையாக பேசியிருக்க வேண்டும். இந்தியாவில் பேரிடர் ஊரடங்கு காலத்தில் கூட ஒரு பட்டினிச்சாவு இல்லை. கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு ரேஷன் கடைகளுக்கு ஒரு கோடியே 15 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 4 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள ரேஷன் கடைகளில் பல இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி படம் ரேஷன் கடை விற்பனையாளர்கள் இடம் பேசி காவல்துறையின் மூலம் பாஜக நிர்வாகிகள் கொடுத்துள்ளார்கள். திருச்சியிலும் பல ரேஷன் கடைகளில் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருச்சி காமராஜபுரம் ரேஷன் கடையில் மோடி படத்தை கொண்டு சென்ற பாஜக மண்டல் தலைவர் பரமசிவன் தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி போன்ற தலைவர்களின் படத்தை வைக்க வேண்டும் என்ற புரோட்டோகால் உள்ளது. இல்லை என்றால் அதை முதல்வர் காண்பிக்கப்படும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பரமசிவம் மீண்டும் வந்தவுடன் அந்த வார்டில் உள்ள 5 ரேஷன் கடைகளிலும் மீண்டும் நரேந்திர மோடி படத்தை மாவட்ட தலைவர் உடன் சென்று அவர் வழங்குவார். மறுத்தால் நான் வருவேன். என்னை தடுத்தாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவார். அடக்குமுறை மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இயலாது. பாஜகவுக்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க இயலாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *