திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டு பள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் பாட்டில் கம்பெனிக்கு 200 மூட்டைகளில் காலி மதுபாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு லால்குடி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தனர். லாரியினை திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சுந்தரமூர்த்தி (29) ஒட்டி வந்துள்ளார். சுந்தரமூர்த்தி மதுபோதையில் லாரியினை ஓட்டி வந்துள்ளார். லால்குடி அருகே மேலவாளாடி ரயில்வே மேம் பாலத்தினைை கடந்ததும், லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக சென்றது. அகிலாண்டபுரம் கிராமத்தினைக் கடந்ததும் லாரியில் அடுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் திருச்சி சிதம்பரம் சாலையின் நடுவே மூட்டை சரிந்து பாட்டில்கள் சாலையில் விழுந்ததில் சாலையே கண்ணாடி பாட்டில்களாக நொருங்கி கிடந்தது.

சற்று தூரத்தில் உள்ள முத்தமிழ்நகர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் மோதிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாலையோரம் நிறுத்தியிருந்த இரண்டு கார்களும் லாரியில் சிக்கி நொருங்கின. லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் இருந்த மின்கம்பம் நொருங்கி விழுந்ததில் தாளக்குடி, முத்தமிழ்நகர், வாழைக்கட்டை, அப்பாத்துரை, அகிலாண்டபுரம், கீரமங்கலம், முத்தமிழ்நகர் ஆகிய கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். சாலையின் நடுவே மதுபாட்டில்கள் நொருங்கி கிடந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் திருச்சி சிதம்பரம் சாலையில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. அப் பகுதி இளைஞர்கள் சாலையில் நொறுங்கி கிடந்த மதுபாட்டில்களை துடைப்பானால் கூட்டி அள்ளி அப்புறப்படுத்தியதும் போக்குவரத்து சீரானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்