திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேரு. இவர் தற்போது தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் நேரு அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு தருவார்கள்.

அதேசமயம் தனது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் அவர்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அதேபோல் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தீவிர பணிகளை ஆற்றி வருகிறார். ஆகையால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அனைவரும் அருண் நேரு, கட்சியில் பதவிக்கு வர வேண்டும், அரசியலில் கால் பதிக்க வேண்டும் என தொடர்ந்து அவர்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அருகே திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பேசுகையில் அருண் நேரு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிட வேண்டும். அதிலும் குறிப்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டால் இதுவரை யாரும் வெற்றி பெறாத அளவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என தெரிவித்தார். இவருடைய பேச்சு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி திமுக வட்டாரங்கள் தெரிவித்த தகவல்.. அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு , வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான ஆயத்த பணிகள் அனைத்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும் நிச்சயம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அருண் நேரு வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தனர்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக கட்சியினர், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் முழுவதும் அருண் நேரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்கள், பதாகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வைக்கப்பட்ட பதாகைகளில் Man Power of Trichy என்றும், 2024 ஆண்டு பாராளுமன்றத்தின் கதாநாயகரே என்ற வசனங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அனைத்து பதாகைகளிலும் MP Trichy என்று எழுதப்பட்டுள்ளதால் அருண் நேர் வருகின்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட உள்ளாரா ?? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு கட்சியின் தலைமை அனுமதி அளித்தால் மீண்டும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்து வருகிறார். இதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா என்ற ஒரு கேள்வி எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பதாகைகளில் பொறிக்கப்பட்ட வசனங்களால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்