ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:-

 மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாட்டுக்கு அனைவரும் எழுச்சியோடு வர வேண்டும். மதுரையை நோக்கி வாருங்கள் என்று சுவர் விளம்பரம் செய்து அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டர்லைட் ஆலையை மூடுவதற்கு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழக மக்கள் நலனுக்காக ம.தி.மு.க பல போராட்டங்கள் நடத்தி வருகிறது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக கவர்னரை பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு தான் அமையும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் , என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுரை முருகன், மாநில துணை பொதுச்செயலாளர் ரொஹையா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *