விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஒரு சில பகுதிகளில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்களும், கலவரங்களும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தியின் போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பெரும் முக்கியத்துவம் அளித்து ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றியும், அச்சமின்றி மக்கள் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் அரியமங்கலம் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரியில் தொடங்கிய கொடி அணி வகுப்பை மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது காமராஜர் நகர், ராஜவீதி, ரயில் நகர் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக வந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரைஸ்மில் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. இதில் மாநகர காவல் இணை ஆணையர் செல்வகுமார் , பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர்கள் திருவானந்தம், தாயளன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.