திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். “ரத்னாவளி” என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் “தாயுமான சுவாமி” என்று அழைக்கப்படுகிறார்.

இந்த மலைக்கோட்டை கோவிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக ஆண்டு தோறும் 150 கிலோவில் மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுவது வழக்கம்.ஆனால், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், மாணிக்க விநாயகருக்கு 30 கிலோவும், உச்சி பிள்ளையாருக்கு 30 கிலோவும் என 60 கிலோ எடையிலான கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

இந்த கொழுக்கட்டை தயாரிப்பதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கபட்டு மேளதாளத்துடன் எடுத்துவரப்பட்டு உச்சி பிள்ளையாருக்கு படைக்கப்பட்டு பின்னர் பிரசாதமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவிப்பின்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில், பக்தர்கள் யாரும் அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *