தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 – வது நாளான இன்று எலும்பு துண்டுகளை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியே வந்த அமைச்சர் உதயநிதி காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறோம். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.தனியார் நிறுவனங்கள் ரூ.5,00,000 கடன் கொடுத்து 48 மாதங்களில் ரூ.7 லட்சம் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.62 லட்சம் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11, 1/2 லட்சம் கட்ட சொல்லி 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கி செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம். மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம். 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுகிறோம்.
மேலும் காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறைத்து விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தினர். பின்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.