தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.


அதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெக்காளியம்மன் பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 9-ம் திருநாளான சித்திரை 1 காலை 10 .05 திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்பட்டது .பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக அம்மனுக்கு காவடி எடுத்தும் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை தரிசித்துச் சென்றனர்.இவ்விழாவில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

10-ம் திருவிழாவான நாளை இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.. 16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்