வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 4-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. 13-ந் தேதி மோகினி அலங்காரமும், 14-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 20-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 21-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவத்தின் 5-ம் நாளான இன்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, முத்து அபயஹஸ்தம், காசுமாலை, பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தியது.

அதுசமயம் முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல்கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *