வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து, பல லட்சங்களை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் வேலைவாய்ப்பு தேடி வந்த நிலையில், திருச்சி தனியார் ரெசிடென்சியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் வௌிநாட்டில் வேலை வழங்குவதாக கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு சரியான வேலைக்கு அனுப்பாமல் கட்டிட பணிக்கு அனுப்பியதோடு, 4 மாதம் காலம் கஷ்டப்பட்ட நிலையில், அங்கிருந்து மீண்டு வந்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் பேசினோம்.
அப்போது, வேறு ஒரு நாட்டிற்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அலைக்கழித்து வருகின்றனர். எனவே இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.