108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கிழக்கு கோபுரத்தின் பகுதி விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


 இந்த நிலையில், இன்று அதிகாலை 1.50 மணி அளவில் திடீரென கிழக்கு கோபுரத்தில் பழுதடைந்து காணப்பட்ட முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை வேளை என்பதால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகம் இடிந்து விழுந்த பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர் மேலும் மற்ற பகுதிகள் இடிந்து விழாத வண்ணம் மரக்கட்டைகள் கொடுத்து முட்டுக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு உறுப்பினர் இன்ஜினியர் கோபாலரத்தினம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் மேலும் அங்கு தலைகவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு தலை கவசம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கப்பட்டது . இந்நிகழ்வின் போது விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *