ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நாளை நடைபெறுகிறது.பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 7ம் நாளான நேற்று (3-ந்தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சிவிகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

 பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 11.30 மணியளவில் தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 12.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.திருவிழாவின் 8ம் நாளான இன்று(4-ந்தேதி) கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து கோரதம் அருகே வையாளி கண்டருளீனார்.

இந்நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். திருவிழாவின் 9ம்நாளான நாளை(5-ந்தேதி) நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர்.

தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *