ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று முன்தினம் காலை நடைபெற்று. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.

உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுளினார்.

உறியடி உற்சவத்திற்காக கருடமண்டபத்தின் மேல் பூக்களால் அலக்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணை நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் எதிரில் நம்பெருமாள், கிருஷ்ணன் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியில் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர். இரண்டாம் வருடமாக கோவிலில் பக்தர்களின்றி நடந்த உறியடி உற்சவம் இதுவாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *