வரும் மே 16 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த புயல் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து கிழக்கு மத்திய அரபிக் கடல் வழியாகக் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது அரபிக்கடலில் புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு தக்டே என்று பெயர் வைக்கப்படும். இது மியான்மர் மூலம் வைக்கப்பட்ட பெயர் ஆகும். தக்டே என்பது மியான்மரின் ஒரு வகை பல்லி இனம் ஆகும். அதே சமயம் இதன் தற்போதைய வலிமையை பார்த்தால், மணிக்கு இந்த புயல் 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 14 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இது வடமேற்குப் பகுதிக்கு நகர்ந்து பின்பு மே 16 ஆம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடலில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. இதனால் தென் தமிழகம், கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த புயலை அடுத்து அரபிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 14 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்தப் புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது லேசான மழையோ பொழியும் எனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது.