திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில் …மூன்றாவது மொழியை கற்று கொள்ள வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறுகிறார். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ் எங்களது அடையாளம். ஆங்கிலம் எங்களுக்கான இணைப்பு மொழி. இரு மொழி கொள்கை மூலம் தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள்.

இங்கு படித்தவர் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப துறையின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி, தமிழ்நாடு திறன்வாய்ந்த மாநிலமாக இருக்க இரு மொழி கொள்கை தான் காரணம். அது ஒன்றிய அரசுக்கும் தெரியும். தெரிந்திருந்த போதும் வீண் வாதத்திற்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்கிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் முதல்முறையாக எனது தொகுதியில் இந்த மையம் துவங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். படித்த மாணவர்கள் அறிவுசார் சொத்துரிமை மையத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் .. நான் மதுரையை சேர்ந்தவன். அதேசமயம் நான் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பயின்றவன். அந்த நன்றி கடனுக்காக, சென்னைக்கு அடுத்தபடியாக மண்டல அளவிலான அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தை திருச்சியில் துவக்கி வைத்துள்ளேன். இதனை தொடர்ந்து மதுரையிலும் தொடங்க இருக்கிறோம் என்று பேசினார். அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மையத்தின் மூலமாக, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, நிதி உதவி, கண்டுபடிப்பு, உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தல், வணிகமயமாக்கல், பொருள்கள் வடிவமைப்பு, அறிவுசார் சொத்து பாதுகாப்பு, தொழில்நுட்ப பறிமாற்றம், கூட்டுஉழைப்பு, இயக்கம், தயாரிப்பு யோசனை ஆகியவற்றை பெறமுடியும் என பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்