திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமமத்தில் அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உபகோவிலாக விளங்கும் அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில், கடந்த, 2022ம் ஆண்டு 50 லட்சம் செலவில் 33 அடி அகலமும் 27 அடி உயரமும் 4 டன் எடை கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக, வைகாசி விசாகத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
“கோவிந்தா.. கோவிந்தா..” கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மங்கள மேள, தாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க, வாண வேடிக்கைகளுடன், தேரோடும் வீதிகளில் தேர் ஆடி அசைந்தாடி வலம் வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில், லால்குடி டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.