மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சம்பந்தமான பத்திரிகையாளர் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது : திருச்சி அரசு மருத்துவமனையில் 1600 படுக்கை வசதியுடன் தினசரி சுமார் 5500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 500 பேர் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. ஆனால் வரக்கூடிய இவ்வளவு எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாள்வதற்கு மருத்துவர்களின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது இன்னும் அதிகமாக செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது மருத்துவக் கல்லூரி மாணவர்களை பயிற்சி என்ற பெயரில் அவர்களை கொண்டுதான் முழுமையான அரசு மருத்துவமனை இயங்கக்கூடிய நிலையில் உள்ளது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது மதியம் 12.30 மணி வரைதான் மருத்துவமனை செயல்படுகிறது அதன் பிறகு எவ்வித மருத்துவ கவனிப்பும் கிடையாது என்பது போன்ற நடைமுறையில் மருத்துவமனைகளில் உள்ள குறைப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும்.  பத்து நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற நிலை என்பது திருச்சி அரசு மருத்துவமனையில் கிடையாது.  மருத்துவமனையில் எந்த நோயாக இருந்தாலும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே தருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனையில் கழிவறைக்கு பயன்படுத்தக் கூடிய தண்ணீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு உள்ளது. டயாலிஸ் நோயாளிகளுக்கு ஒரு நபருக்கு 150 முதல் 200 லிட்டர் வரை சுத்தமான ஆர்.ஓ குடிநீர் வேண்டும் பல நேரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் டயாலிஸ் செய்வதே தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகிறது.

காப்பீடு திட்டங்களை பயன்படுத்தி சிகிச்சை செலவினங்களை விட கூடுதலாக காப்பீடு பணத்தை பெறுவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. மகப்பேறு மருத்துவ வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகள் கிடைக்காமல் பிரசவித்த தாய்மார்கள் தரையில் படுக்க வைக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டுள்ளது திருச்சி அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளின் சார்பில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்திட உள்ளோம். 5 லட்சம் கையொப்பங்கள் பெற்று வருகின்ற ஜூலை 21ஆம் தேதி கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் இயக்கமாக நடத்திட உள்ளோம் என்றார். பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.லெனின், எஸ்.ரேணுகா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *