திமுக ஆட்சியமைத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவர் கோவை மாவட்ட வளர்ச்சிக்கான பொறுப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள மோசடி வழக்கு ஒன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்துள்ளது. இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை அதிகாரிகள் தூசித்தட்ட தொடங்கியுள்ளனர். அதாவது, டெல்லி மேலிடத்தில் உள்ள ஹிட் லிஸ்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சென்னை அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மாற்றியதுடன், விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணையை துரிதப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அமைச்சருக்கும், திமுகவினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.