தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி திருச்சி மாநகராட்சி ஆகும். திருச்சி மாநகராட்சியில் 1 முதல் 65 வார்டுகள் உள்ளன. இதில் அரியமங்கலம் கோட்டம், பொன்மலை கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், அபிஷேகபுரம் கோட்டம் என நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸின் 2-ம் அலை நோய் தொற்றின் பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். குறிப்பாக அவர் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் உத்தரவாக அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடையை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள (முன்கள பணியாளர்) மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முக கவசம் அணியாமல், கைகள் மற்றும் கால்களில் பாதுகாப்பு உரை ஏதுமின்றி சாக்கடையில் இறங்கி துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இப்படி கொடிய கொரோனா நோய்தொற்று காலத்தில் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி இப்படி தங்கள் உயிரை துச்சமென நினைத்து வேலை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலான ஆண் தூய்மைப் பணியாளர்கள் கைக்குட்டையையும் பெண் பணியாளர்கள் துப்பட்டாவையுமே முகக்கவசமாக அணிகிறார்கள். மேலும், சிலர் எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். சாக்கடை கழிவு மற்றும் குப்பைகளை அள்ளுவதால் கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்குப் பதிலாக நோய்த்தொற்றின் பிடியில் இவர்கள் அல்லவா மாட்டிக்கொள்வார்கள்.முன் களப்பணியாளர்களாகிய தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் முகக்கவசம், கையுறை, சானிடைசர், சோப்பு போன்ற அத்தியாவசியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என ஆய்வு செய்து. துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும், அவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.