தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நடேசனார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக மருத்துவர் சமுதாயத்தை சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். திருக்கோவிலில் பணிபுரியும் முடி இறக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதிய நடைமுறை கைவிட்டு பழைய நடைமுறையை செயல்பாட்டுத்த வேண்டும்.
மருத்துவ சமுதாய மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்ட வரையறைக்குள் இணைக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ்க்கு தபால் தலை வெளியிட வேண்டும். அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு எஸ்.எஸ்.ஆனந்தம் பண்டிதர் பெயரைசூட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட தலைவராக எஸ். சண்முகசுந்தரம், செயலாளராக எஸ். சுரேஷ், பொருளாளராக கலைமணி, மண்டல அமைப்பாளராக செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளராக மாரிமுத்து, மகளிர் அணி அமைப்பாளராக கலைவாணி உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் மாநில பொருளாளர் குமார் நன்றி கூறினார்.