ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. அற்புதமான ஆடிப்பூரம் நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வேண்டிக்கொண்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுக்க புத்திரபாக்கியம் கிடைக்கும். என்பதால் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள ஸ்ரீ குங்குமவல்லி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 10008 வளையல்கள் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் கோயிலில் சிறப்பாக இந்தக் கோவிலில் வேண்டுதலுக்காக வரும் கர்ப்பமடைந்த பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டி, இங்கிருந்து வளையல்களை பிரசாதமாக பெற்று அணிந்து கொள்கின்றனர் . நிறை மாத கர்ப்பிணிகளுக்கு வீட்டிலிருந்து யாராவது வந்து வளையல் வாங்கிச் சென்று வீட்டிலேயே அணிவிக்கலாம் . ஏற்கனவே வளைகாப்பு முடிந்திருந்தாலும் , இவ்வளையலை கூடுதலாக அணிந்து கொள்ளுவதன் மூலம் இந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறுகிறது. அதற்காகவே கர்ப்பிணிகளுக்கு ஸ்பெஷல் பிரசாதமாக வளையல் தரப்படுவது இந்த ஸ்ரீகுங்குமவல்லி கோவிலின் தனி சிறப்பு.
மேலும் ஸ்ரீ குங்குமவல்லி கோவிலின் சிறப்புகள் குறித்து குருக்கள் ஹரிஹரன் கூறுகையில்:
இங்கு அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்பிக்கைக்கு வருடந்தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி , சனி , ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது . இவ்விழாவில் கர்ப்பிணிகளும் , குழந்தை பாக்கியம் , மணப்பேறு வேண்டுபவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர் . அச்சமயம் அம்மனை இலட்சக்கணக்கான வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள் . அந்த வளையல்களை அங்கு வரும் பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கும் அணிவிப்பர் . வெள்ளிக் கிழமையன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிப்பதால் , அவர்கள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது . சனிக்கிழமையன்று குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல் அணிவிக்க , அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் . ஞாயிறன்று மணமாகாத பெண்கள் வளையல் அணிந்து கொள்ள , அவர்களுக்கு விரைவாக திருமணம் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை திகழ்கிறது. தற்போது கொரோனாவின் 3-ம் அலை பரவல் காரணமாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் ஸ்ரீ குங்குமவல்லி அம்மனுக்கு செலுத்தப்பட்ட வளையல்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.