கொரோனா தொற்று 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சியில் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை முன்னிட்டு கோவில்களில் தரிசனம் செய்யவும் மற்றும் காவிரி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று 11ம் தேதி ஆடி பூரத்தை ஒட்டி அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து வருவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல், வயலூர் முருகன் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும் சில பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்றவாறு சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.