திருச்சி மரக்கடை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் அப்துல் பஷீர் தலைமை தாங்கினார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி வள்ளுவர் நகர், ஜீவா நகர், கல்யாணசுந்தரம் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் பல வருடங்களாக பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு வருடமாக போதிய சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனர் .
இதன் காரணமாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக மரக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.