சிவில் பிரச்னையில் தாய், மாற்றுத் திறனாளி மகளை தாக்கிய மானாமதுரை இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சரியாக விசாரிக்காத டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மேலக்கரையைச் சேர்ந்தவர் நாகலட்சுமி இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.
நான் மாற்றுத் திறனாளி. தாயுடன் வசிக்கிறேன். எனது புது வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தேன். எங்களுக்கும், மற்றொரு குடும்பத்திற்கும் இடையே சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் அளித்த பொய் புகார் அடிப்படையில், மானாமதுரை இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் எங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்.மறுத்ததால் எனது தாயை, மானாமதுரை ஸ்டேஷனில் சட்டவிரோத காவலில் வைத்தனர். இது குறித்து எனது தாய் சிவகங்கை எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். அதன்அடிப்படையில் மானாமதுரை டி.எஸ்.பி., விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எங்கள் வீட்டிற்குரிய இடத்தில் கற்களை குவித்தனர். இது பற்றி கேட்டதற்கு என்னையும், என் தாயையும் தாக்கினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். எனவே போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும். என அந்த மனுவில் குறிப்பிட்டார்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது;-
மேலும் சிகிச்சையின் போது மனுதாரர் மற்றும் அவரது தாய் எடுத்த போட்டோ இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலிக்காமல், புகாரை இயந்திரத்தனமாக டி.எஸ்.பி., கையாண்டு, பொய் புகார் என சாதாரணமாக முடித்துள்ளார். போலீசாரை காப்பாற்றும் நோக்கில் டி.எஸ்.பி., மோசமான விசாரணையை நடத்தியுள்ளதை காட்டுகிறது.’ மனுதாரர், அவரது தாயை தாக்கிய இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் மற்றும் பிற போலீசார் மீது எஸ்.பி., வழக்கு பதிய வேண்டும். டி.எஸ்.பி.,யின் செயலுக்கு இந்நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை தேவைப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.