திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது இரு மகள்களான ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர். ஊருக்கு சற்று தொலைவில் இவர்களது வீடு இருந்ததால் ஊர் மக்களும் இவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலான நேரம் இவர்கள் ஜெபம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க இவர்களது உறவினர் ஒருவர் புதுச்சேரியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்து மேரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இறந்து விட்டதும் அவரது சடலத்தை வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்பிப்பதாகக் எண்ணி ஜெபம் செய்து வருவதையறிந்து உடனடியாக இறந்த தாய்யை அடக்கம் செய்ய கூறினார்.
ஆனால் அவரை சகோதரிகள் இருவரும் திட்டி வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வந்த அவர் ஊர் மக்கள் சிலரிடம் இதுகுறித்த தகவலை சொல்லிவிட்டு மீண்டும் புதுச்சேரி சென்று விட்டார். இது குறித்து ஊர்மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவுகளை தட்டியபோதும் சகோதரிகள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலில் பைபிள் ஒன்றை வைத்து ஜெபம் செய்துள்ளதும் தெரிந்தது. ஆனாலும் சகோதரிகள் தங்களது தாயார் உயிரோடு இருப்பதாகவும், அவரது உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினரை வரவழைத்து மேரியை பரிசோதனை செய்தபோது அவர் உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சகோதரிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவரும் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கும் என தெரிவித்தார். ஆனாலும் மேரியின் மகள்கள் இருவரும் மருத்துவர் கூறியதையும் ஏற்க மறுத்து தங்களது தாய் இறக்கவில்லை, அவர் உயிருடன் வருவார் என கூறி மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இரவு 9 மணிக்கு துவங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே சகோதரிகளிடமிருந்து அவர்களது தாயாரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த தங்களது தாயாரின் உடலை வைத்து ஜெபம் செய்து வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.