திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford ) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, 2020 வரையிலான ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலில், இடம் பெற்றுள்ளார். இந்த தரவரிசை உலகளவில் சுமார் 70 லட்சம் விஞ்ஞானிகளின் பதிப்புகளின் பல்வேறு திறன்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் பிலிப் தாமஸ் கண் மருத்துவ ஆராய்ச்சியில், இந்திய அளவில் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கண் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிரியல் சார்ந்த இவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவ நுண்ணியிரியலில் எம்.டி மற்றும் பி.எச்.டி பட்டங்கள் பெற்றிருக்கும் டாக்டர் பிலிப் தாமஸ் அவர்கள், 173 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 14 தேசிய மற்றும் சர்வதேச பாடநூல்களில் பல்வேறு அத்தியாயங்களையும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேலான மாநாடுகளில், தனது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றி உள்ளார். கருவிழியில் நுண்ணுயிரிகளாலும் பூஞ்சைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் சார்ந்த துறையில் உலகளவில் சிறந்த நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார். டாக்டர் பிலிப் தாமஸ் தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவ விஞ்ஞானிகளுக்கான விருதினை 1997 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆப் பெதாலஜிஸ்ட்ஸ் ( Royal College of Pathologists ) இவரை கௌரவ உறுப்பினராக தேர்வு செய்தது.
டாக்டர் தாமஸ் 1984 ஆம் ஆண்டு முதல் ஜோசப் கண் மருத்துவமனையில் தனது அரும்பணிகளை ஆற்றி வருகிறார்.கண் மருத்துவத்தில் உள்ள பற்பல சிறப்பு பிரிவுகளில், தத்தம் துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற மருத்துவர்களையும், உலகத்தரம் வாய்ந்த நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சையளிக்கும் கருவிகளையும் ஒருங்கே பெற்ற, NABH முழு தரச் சான்றிதழ் பெற்றுள்ள ஜோசப் கண் மருத்துவமனையில் பல உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் ஆராய்ச்சி துறையை வழிநடத்தி, இந்திய மற்றும் சர்வதேச கண் மருத்துவ ஆராய்ச்சிக்கு அவர் அளப்பறிய பங்களித்து, இத்துறையில் முன்னோடியாக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.