திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பேரணி காவிரிப்பாலத்தில் நிகழ்த்தப் பெற்றது. உலக ஓசோன் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் மாபெரும் மனிதச்சங்கிலி பேரணியினை திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் கோட்டம், காவல்துறை உதவி ஆணையர் உயர்திரு.சீதாராமன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி.அல்லி அவர்களும், சுயநிதிப்பிரிவுப் பொறுப்பாளர் முனைவர் எஸ்.சாந்தி அவர்களும் முன்னிலை வகித்தனர். ஓசோன் படல பாதிப்பைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற விதத்திலும், காற்று மண்டலத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற விதத்திலும்
சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரி மாணவியர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மாபெரும் மனிதச் சங்கிலி பேரணியினை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினர். சீதாலஷ்மி ராமஸ்வாமி கல்லூரி பெண் கல்விச்சேவையில் வெற்றிகரமாக தனது 75-ஆம் ஆண்டினைக் கொண்டாடி வருகின்ற சூழலில் ஓசோன் படலத்தின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்ற வகையில் இத்தகு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி நிகழ்த்தப் பெற்றுள்ளது.