உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி தி ஐ ஃபவுண்டேஷன், திருச்சி வளாகத்திலிருந்து துவங்கியது. இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண்களை பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் வாழ்க்கை முறை கட்டுப்பாடு, மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிதல் ஆகியவற்றை வலியுறுத்தும் பலகைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

நீரிழிவு ரெட்டினோபதி என்பது, இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு கண் பின்புறத்தில் உள்ள ஒளியை உணரும் ரெட்டினா திசுக்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தும் போது ஏற்படும் நோயாகும். ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால் நோய் முன்னேறும்போது மங்கிய பார்வை, கண் உள்ளே இரத்தக் கசிவு, ரெட்டினா பிரிவு, மற்றும் சிகிச்சை இல்லாவிட்டால் நிரந்தர குருட்டுத்தனம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வுகள் படி, ஒவ்வொரு மூன்று நீரிழிவு நோயாளிகளில் ஒருவருக்கு இந்நோயின் ஆரம்ப நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய தி ஐ ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் அர்ச்சனா தெரேசா அவர்கள் கூறியதாவது: “நீரிழிவு நோய் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. ஆனால் அதன் கண் ஆரோக்கியத்திற்கான தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப் படுவதில்லை. உண்மையில், நீரிழிவு ரெட்டினோபதியால் ஏற்படும் பார்வை இழப்பு, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெருமளவு தவிர்க்கக்கூடியது. இந்த பேரணியின் மூலம் மற்றும் தொடர்புடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக, நேர்மையான கண் பரிசோதனைகளும், நல்ல நீரிழிவு கட்டுப்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.”

உலக நீரிழிவு நோய் தின நிகழ்வின் ஒரு பகுதியாக. தி ஐ ஃபவுண்டேஷன் வாரம் முழுவதும் இலவச நீரிழிவு கண் பரிசோதனை முகாம்கள் மற்றும் கல்வி அமர்வுகளையும் நடத்துகிறது. இந்த முயற்சிகள், நீரிழிவு நோய் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் பார்வையைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுமார் நாற்பது ஆண்டுகால பாரம்பரியத்துடன், தி ஐ ஃபவுண்டேஷன் தென் இந்தியாவில் மேம்பட்ட கண் சிகிச்சையில் முன்னோடியாக இருந்து வருகிறது கண்ணின் பார்வையை ஆபத்துக்குள்ளாக்கும் நோய்களைத் தடுக்கவும், சிறந்த சிகிச்சை வழங்கவும் மருத்துவமனை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
