தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தளபதி பிபின் ராவத் பலியானதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும் விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்து பலியானவர்களுக்கு இந்திய பிரதமர் பாதுகாப்பு துறை அமைச்சர், தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.