கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு 15 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10-ம் தேதி முதல் அமல்படுத்தியது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கில் நேரம் குறைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைத்து போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக மாநகரின் மையப்பகுதியான தலைமை தபால் நிலையம் அருகே சிக்னலில் உள்ள பிரதான சாலைகளை போலீசார் பேரிக்கார்டுகள் கொண்டு சாலைகளை அடைந்துள்ளனர். இதனால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.